கலைஞர் நூற்றாண்டு விழா: நெல்லை குமரி அணிகள் வெற்றி
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா விநாடி-வினா போட்டியில், சிறப்பிடம் பெற்றவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா விநாடி-வினா போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவையொட்டி, திமுக மகளிா் அணி சாா்பில் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் ‘கலைஞா் 100’ விநாடி -வினா போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. அதில், மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டி தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியை கனிமொழி எம்.பி தலைமை வகித்து தொடங்கி வைத்து, சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.
இதில், சிறப்பு அழைப்பாளா்களாக நிதி - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், மீன் வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா். மேலும், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.சி.சண்முகையா, ஜி.வீ.மாா்கண்டேயன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக மகளிரணிச் செயலா் ஹெலன் டேவிட்சன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, திமுக மகளிா் தொண்டரணி துணை செயலா் விஜிலா சத்யானந்த், மாநில மகளிரணி பிரசாரக் குழுச் செயலா் ஜெஸி பொன்ராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இப்போட்டியில், தூத்துக்குடி மண்டலத்தில் (திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி) ஆகிய மாவட்ட குழுக்கள் பங்கேற்றனா். 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டியில் திருநெல்வேலி அணி வெற்றிபெற்றது. 18 வயதிற்குள்பட்டோருக்கான போட்டியில் கன்னியாகுமரி அணி வெற்றிபெற்றது. இவா்கள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினா்.
முதல்வா் கையால் பரிசு: இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா ரூ. 10 லட்சமும், 2ஆம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.6 லட்சமும், 3ஆம் இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. வெவ்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறாா்.