கரூர் : தரமற்ற டெல்லி அப்பளம் பறிமுதல் - உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

கோவில் விழாவில் சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்கப்படுவது குறித்த வீடியோ வைரலாக பரவிய நிலையில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-29 05:20 GMT

கரூர் ஸ்ரீ மாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றங்கரையில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளில் பானி பூரி, மசால் பூரி, காலிஃப்ளவர், சில்லி மற்றும் டெல்லி அப்பளம் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் அமராவதி ஆற்றங்கரையில் விற்கப்படும் அப்பளத்தை காய வைப்பதற்காக, கரூரில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையில் சேரும், சகதியுமாக உள்ள இடத்தில் தரை மீது போடப்படும் விரிப்பில், ஈரமான அப்பளத்தை காய வைக்கின்றனர்.

அதே இடத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்ட எச்சில் தட்டுகள் மற்றும் காகிதங்களை காய வைக்கப்பட்ட அப்பளங்களின் மீதே பொதுமக்கள் தூக்கி வீசி சென்றுள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அறிந்த கரூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதியில் அமைந்துள்ள 7- கடைகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, சுகாதாரமற்ற முறையில் காய வைக்கப்பட்ட 20 கிலோ ஈரமான டெல்லி அப்பளங்களை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த கடைகளில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட 7 கிலோ காலிஃப்ளவர் சில்லி உள்ளிட்ட தின்பண்டங்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தின்பண்டங்களை சாக்கு பையில் போட்டு பினாயில் ஊற்றி அளித்தனர். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News