நரிக்குடி அருகே தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய கிடா முட்டு போட்டி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் பகுதியில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய கிடா முட்டு போட்டி நடைபெற்றது.

Update: 2024-03-03 13:27 GMT

கிடா முட்டு போட்டி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள வீரசோழன் கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரியமிக்க விளையாட்டுக்களில் ஒன்றான கிடாமுட்டு போட்டி வீரசோழன் வாரச் சந்தை திடலில் பார்வையாளர்களின் விசில் பறக்க வெகு விமரிசையாக நடைபெற்றது.

போட்டி விழாவிற்கான மேடை, மைதானம், பார்வையாளர்களுக்கான ஏற்பாடுகள் என அனைத்து முன்னேற்பாடுகளும் கடந்த இரண்டு நாட்களாக முழு வீச்சில் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் மதுரை உயர் நீதிமன்றத்தின் முறையான அனுமதியுடன் இந்த மாபெரும் கிடாமுட்டு போட்டி இன்று நடைபெற்றது.

இந்த விழாவிற்கு வீரசோழன் இஸ்லாமிய டிரஸ்ட் போர்டு தலைவரும், இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவருமான பஷீர் அஹமது தலைமை தாங்கி கிடாமுட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்ற இந்த கிடாமுட்டு சண்டை போட்டியில் விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை , திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 50 க்கும் மேற்பட்ட கிடாய் ஜோடிகள் இந்த கிடா முட்டு போட்டியில் பங்கேற்றன. காலை முதலே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த கிடாமுட்டு சண்டை போட்டியில் கலந்துகொண்ட கிடாய்கள் கடும் ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்டன.

போட்டியில் அதிக முட்டுக்களுடன் அசராமல் களத்தில் கம்பீரமாக நின்ற கிடாய்களுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் சில்வர் அண்டா, குத்துவிளக்கு, பித்தளை பாத்திரங்கள், ரொக்கப்பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த கிடாமுட்டு போட்டியைக் காண உள்ளூர் மற்றும் வெளியூர் ரசிகர்கள் என ஏராளமான பார்வையாளர்கள் கலந்துகொண்டு கிடாமுட்டு போட்டியை விசில் பறக்க ஆரவாரத்துடன் கைத்தட்டி போட்டியை வெகுவாக கண்டு ரசித்தனர். மேலும் தெற்குவாசல் கிடாமுட்டு நண்பர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து நடத்திய இந்த மாபெரும் கிடாமுட்டு சண்டை போட்டிக்காக மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் திருச்சுழி டி.எஸ்.பி ஜெகநாதன் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News