கொடைக்கானல் : இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறையில் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சரிசெய்து, தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் குழந்தைகள் மையம்(அங்கன் வாடி) செயல்பட்டு வருகிறது, இந்த குழந்தைகள் மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இங்குள்ள குழந்தைகள் மைய கட்டிடத்தின் மேற்கூரை ஆங்காங்கே இடிந்து அதன் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. மேலும் இங்குள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உடைந்த நிலையிலும், சிமெண்ட் சீட் கொண்ட மேற்கூரைகள் உடைந்த நிலையில் இருப்பதால் மழை காலங்களில் மழைநீர் குழந்தைகள் படிக்கும் அறையில் வடிந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு முறையான கழிப்பிட வசதி இல்லாததால் திறந்த வெளியில் இயற்கை உபாதைகள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது,மேலும் இங்கு முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த குழந்தைகள் மைய கட்டிடத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் பெறும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மாவட்ட நிர்வாகம் துரிதமாக குழந்தைகள் மையத்தில் பயிலும் குழந்தைகள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுக்கோளும் எழுந்துள்ளது.