கொடைக்கானல் ; கேரட் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் கேரட் விலை வீழ்ச்சியால் மலைக்கிராம விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கேரட்டிற்கு ஆதார விலை வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளான பள்ளங்கி,வில்பட்டி,அட்டுவம்பட்டி,செண்பகனூர்,பூம்பாறை, மன்னவனூர்,கூக்கால்,பழம்புத்தூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் முக்கிய தொழிலாக விவசாயம் மட்டும் செய்யப்படுகிறது,இந்த மலைகிராமங்களில் உருளை கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ், கேரட், மலைப்பூண்டு,உள்ளிட்ட முக்கிய மலை காய்கறிகளும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது,
இந்த மலைக்காய்கறிகளில் முக்கியமாக கேரட் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது, மேலும் கேரட் 90 நாட்கள் விவசாயமாகும், கேரட் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்டிருந்த நிலையில் மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையினால் கேரட் விளைச்சல் பரவலாக காணப்படுகின்றது, மேலும் இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் மதுரை, திருச்சி,கொடைரோடு,தேனி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது,
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக ஒரு கிலோ கேரட் 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையானது, இந்நிலையில் வெளியூர் சந்தைக்கு டெல்லி உள்ளிட்ட வெளிமாநில கேரட் வருகை அதிகரிப்பால் தற்போது ஒரு கிலோ கேரட் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையாவதால்,கேரட் விதை,மருந்து, பராமரிப்பு கூலிக்கு கூட கட்டுப்படியாகவில்லை என்றும் கை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்,மலைக்கிராம விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்,இதனை தமிழக அரசு மற்றும் மலைபயிர்கள் விவசாயத்துறை கவனம் செலுத்தி கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் கேரட்டிற்கு ஆதார (நிரந்தர) விலையை நிர்ணயம் செய்து கேரட் விற்பனையை அதிகரிக்க உதவ வேண்டும் என மலைக்கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.