கொடைக்கானல் : மலைப்பூண்டு நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம்

கொடைக்கானல் மலைக்கிராமங்களில் மழை தொடர்வதால் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு நடவு செய்யும் பணியில் மலைக்கிராம விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Update: 2024-06-12 05:11 GMT

மலைப்பூண்டு நடவில் ஈடுபட்டுள்ள பெண்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூண்டி, கிளாவரை, வில்பட்டி, மன்னவனூர், கவுஞ்சி, பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் பல ஏக்கர் பரப்பில் மலைப்பூண்டு விவசாயம் செய்யப்படுகிறது. மற்ற மலைகளில் விளையும் பூண்டுகளை விட கொடைக்கானல் மலைப்பூண்டு அதிகம் மருத்துவதன்மை கொண்டது.

மலைக்கிராமங்களில் சிங்கப்பூர்,மேட்டுப்பாளையம் என இரண்டு வகைகள் நடவு செய்யப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது, இதில் சிங்கப்பூர் வகை பூண்டுகள் வீட்டில் வைத்து புகை போட்டு ஒரு வருடம் முழுவதும் இருப்பு வைத்து விற்பனை செய்து வருகின்றனர்,மேலும் பாரம்பரியமாக மலை கிராம விவசாயிகள் நூற்றாண்டுகளுக்கு மேலாக மருத்துவகுணமிக்க மலைப்பூண்டுவிவசாயம் செய்துவருவதால் இதை அங்கீகரிக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொடைக்கானல் மலைப்பூண்டிற்கு புவிசார்குறியீடு மத்திய அரசால் வழங்கப்பட்டது.

இதனையடுத்து ஏப்ரல் இறுதி மற்றும் மே மாதங்களில் மலைப்பூண்டு விதைகள் நடவும் செய்யும் பணி நடைபெறுவது வழக்கம்,இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக ஏப்ரல்,மே மாதங்களில் கடும் வெப்பம் நிலவியதால் மலைக்கிராம விவசாயிகள் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழலால் நடவு செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டது, இதனை தொடர்ந்து மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்வதால் விவசாயத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளதால் மலைக்கிராம விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் மலைப்பூண்டு விதைகளை நடவு செய்யும் பணியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் இந்த மலைப்பூண்டு விவசாயம் 90 நாட்களாகும்,இதனையடுத்து தற்போது நடவு செய்யும் மலைப்பூண்டு 90 நாட்களுக்கு பிறகு கடந்த மாதங்களில் கிடைத்த வருவாயை விட அதிகமாக வருவாய் கிடைக்கும் என்று என்ற எதிர்ப்பார்ப்பில் மலைக்கிராம விவசாயிகள் மலைப்பூண்டு விதைகளை நடவு செய்து வருகின்றனர், மேலும் அரசு மானியத்துடன் விதை,மருந்துகள் உள்ளிட்டவை தமிழக அரசு வழங்க வேண்டும் என மலைக்கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News