செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர பூஜை
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் நடைப்பெற்ற குபேர பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் அமைந்துள்ளது காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். 12 ராசிகளுக்கு 12 தூண்களில் 12 குபேர பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பாகும். இத்திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரம் அன்று குபேர யாக வேள்வி நடைபெறும். அதன்படி ஆனி மாத குபேர யாக வேள்வி நேற்று நடைபெற்றது. சித்திரலேகா சமேத குபேர பெருமான் சந்நதி முன்பு கணபதி வழிபாட்டோடு யாக வேள்வி நடைபெற்றது.
தொடர்ந்து மஹாபூர்ணாஹுதியும், சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவிய மற்றும் கலச தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மஹா தீபாராதனை நடைபெற்றது. குபேர யாக வேள்வியில் கலந்து கொள்வதன் மூலம் செல்வ வளம் பெருகும் கடன் பிரச்சனைகள் தீரும் என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.