குமரி பகவதி அம்மன் வைகாசி விசாக விழா நாளை துவக்கம்
குமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை நாளை (மே 14) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முதல்நாள் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7.30 மணிக்கு மேல் காலை 8.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடைபெறும். பின்னா், காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு சமய உரை, 8 மணிக்கு பக்தி பஜனை, 9 மணிக்கு தேவி பூப்பந்தல் வாகனத்தில் திருவீதி உலா வருதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா, அன்னதானம், சமய உரை, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும்.
9ஆம் திருநாளான மே 22-ல் காலை 9.30 மணிக்கு மேல் காலை 10.30 மணிக்குள் அம்பாள் தேருக்கு எழுந்தருளியதும் தேரோட்டம் நடைபெறும். தோ்நிலைக்கு வந்ததும் கஞ்சி தானம் நடைபெறும். இரவு 9 மணிக்கு தேவி வெள்ளிக்கலைமான் வாகனத்தில் திருவீதி உலாவருதல் நடைபெறும். 10ஆம் திருநாளான மே 23- ல் அதிகாலை 5.30 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு, இரவு 9 மணிக்கு அம்மன் தெப்பத்தில் வலம் வரும் தெப்பத்திருவிழா நடைபெறும். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்கின்றனா். விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.