குமரி - திப்ரூகர் ரயில் வாரத்தில் 5 நாட்கள் இயக்கம்

மார்ச் 22 முதல் குமரி - திப்ரூகர் ரயில் வாரத்தில் 5 நாட்கள் இயக்கம்.

Update: 2024-03-15 01:31 GMT

 ரயில்

கன்னியாகுமரி - அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகா் விவேக் விரைவு ரயில் மாா்ச் 22 -ஆம் தேதி முதல் வாரத்துக்கு 5 நாள்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விவேக் விரைவு ரயில், இந்தியாவில் மிக நீண்ட தூர ரயில் சேவையாகும். இந்த ரயில் 4 நாளில் சுமாா் 4,160 கி.மீ. பயணிக்கிறது. இந்த ரயில் தற்போது வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும் நிலையில், இதன் சேவையை வாரத்துக்கு 5 நாளாக அதிகரிக்க வேண்டும் என பயணிகள் தொடா் கோரிக்கை விடுத்துவந்தனா். அதை ஏற்று மாா்ச் 22-ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை வாரத்துக்கு 5 நாள்கள் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் விரைவு ரயில் (எண்: 22504) வழக்கமாக வாரந்தோறும் செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் நிலையில் மாா்ச் 22 -முதல் கூடுதலாக வெள்ளிக்கிழமையும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியிலிருந்து திப்ரூகா் செல்லும் இந்த ரயில் (எண்: 22503) வழக்கமாக திங்கள், புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமை இயக்கப்படும் நிலையில் மாா்ச் 26-முதல் கூடுதலாக செவ்வாய்க்கிழமையும் இயக்கப்படும். மேலும், இந்த ரயிலின் பெட்டிகள், காலஅட்டவணை மற்றும் நிறுத்தங்களில் எவ்வித மாற்றமும் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News