வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா
அச்சிறுபாக்கம் அருகே அல்லுார் வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.
அச்சிறுபாக்கம் ஒன்றியம், முருங்கை ஊராட்சிக்குட்பட்ட அல்லுார் கிராமத்தில், சிறிய அளவில் இருந்த தேவி, பூதேவி உடனுறை வரம் தரும் வரதராஜ பெருமாள் கோவில், தற்போது புதிதாக பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கொடிமரம் நிறுவப்பட்டு, பல்வேறு திருப்பணிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 13ல் விசேஷ ஆராதனை, பகவத் அனுக்ஞை, அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட முதல் கால யாக சாலை பூஜைகள் துவங்கின. நேற்று முன்தினம் பிம்பசுத்தி, திருமஞ்சனம், பெருமாள் தாயார் கண் திறப்பு நடந்தது.
மாலையில், மூன்றாம் கால ஹோமம், பூர்ணாஹுதி, நரசிம்மர் ஹோமம் நடந்தன. கும்பாபிஷேக தினமான நேற்று, விஸ்வரூபம், கும்ப ஆராதனம், நான்காம் கால ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, கும்பம் புறப்பட்டு, அதிர்வேட்டுகள் முழங்க, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, வேதவிற்பன்னர்கள் கோவில் விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, மஹா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்து. விழாவில், அல்லுார், முருங்கை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 2:00 மணிக்கு தேவி, பூதேவி - வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. இரவு மலர் அலங்காரத்துடன், சுவாமி வீதி உலா நடந்தது.