அருள்மிகு கடம்பவனேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு என்னும் கும்பாபிஷேக விழா
அருள்மிகு கடம்பவனேஸ்வரர் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு என்னும் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
Update: 2024-07-12 11:39 GMT
அருள்மிகு கடம்பவனேஸ்வரர் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு என்னும் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலையில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோவில், காவிரி தென்கரையில் காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி அமையப்பெற்ற திருத்தலமாகும். கடம்ப மரங்கள் நிறைந்த பகுதியில் சிவபெருமான் சுயம்பு லிங்க மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். காவிரிக்கு தென்கரையில் இரண்டாவது தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும், அப்பர், அருணகிரியார், ஐய்யடிகள், காடவர்கோன் போன்ற அருளாளர்களால் பாடப்பட்ட திருத்தலமாகவும் விளங்கும் இக்கோயிலில் பாலகுஜலாம்பிகை எனும் முற்றிலா முலையம்மை உடனுறை அருள்மிகு கடம்பவனேஸ்வரர், காலைக்கடம்பர் எனும் வழிபாட்டு சிறப்பு மிக்கவராக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மேலும், பிரம்மதேவர் அக்னி தீர்த்தம் அமைத்து வழிபட்டதும், மகாவிஷ்ணு வேதங்களை மீட்க, சிவபெருமானை வழிபட்டதும், முருகப்பெருமானது ஊமைத்தன்மையை நீக்கியதும், அகத்தியர் கண்ணுவ முனிவர் ஆகியோர்களால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த தலமாகவும் உள்ளது. இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதியானது குபேரபுரி, பிரம்மபுரி ஞானபுரி, கந்தபுரி தட்சிண காசி, கடம்பந்துறை என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவதற்காக கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று அதிகாலை குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த ஜூலை 10ஆம் தேதி காலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, விக்னேஷ்வர பூஜை லட்ச்சார்ச்சனை, நாடி சந்தனம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி, மகா தீபாராதனை உள்ளிட்ட நான்கு கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர். இன்று அதிகாலை நான்காம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் மேல தாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் புனித நீர் கும்பத்தினை கோவில் கோபுரத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். வேத மந்திரங்கள் முழங்க விமான ராஜகோபுரம், கடம்பவனேஸ்வரர், முற்றில்லா முலையம்மை அம்மன், விநாயகர், முருகன், கால பைரவர், விமான கோபுர கலசங்களுக்கு புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர். பின்னர் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மூலவர் சாமி சிலைகளுக்கும் புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழாவில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கும்பாபிஷேக விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஆன்மீக சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலரும் அன்னதானம் செய்தனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.