தஞ்சாவூரில் குறுவை சாகுபடி பணிகள் தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியது.

Update: 2024-05-12 06:47 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியது. இதுவரை 24 ஆயிரம் ஏக்கரில் குறுவை நடவு பணிகள் முடிவடைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 102.74 அடி நீர்மட்டம் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இதே நாளில் வெறும் 51.81 அடி நீர்மட்டமே உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் நீர் இருப்பு 68.439 டி.எம்.சி. ஆகும். இந்த ஆண்டு இதே நாளில் 18.971 டி.எம்.சி. மட்டுமே உள்ளது.இதனால் நடப்பு ஆண்டு காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் பம்பு செட்டு ஆழ்குழாய் வசதி உள்ள விவசாயிகள் குறுவை சாகுபடி பணியை தற்போது தொடங்கியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் முற்பட்ட குறுவையாக இதுவரை 24 ஆயிரம் ஏக்கரில் நடவு பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் ஆங்காங்கு விதை விட்டு நாற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை தஞ்சை, அம்மாபேட்டை, ஒரத்தநாடு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய பகுதிகளில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறுகிய கால பயிர்களான 110 நாள், 115 நாள் பயிர் விதைகள் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக தமிழக அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் 154 மெட்ரிக் டன் நெல் விதை இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. கோஆர் 51 டி.பி.எஸ் 5, ஏ.எஸ்.டி.16, ஏ.டி.டி.53 ஆகிய ரகங்கள் இருப்பில் உள்ளன. மேலும் 10,824 மெட்ரிக் டன் யூரியா, 1654 மெட்ரிக் டன் டிஏபி, 1472 மெட்ரிக் டன் பொட்டாஷ், 3305 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.ஆனால் இதுவரை குறுவை சாகுபடி மேற்கொள்ள தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. விவசாயிகள் ஆழ்குழாய் நீரை நம்பி தாங்களாக முன்வந்து குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர்.முன்பட்ட குறுவை அறுவடைக்கு பின்பு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் சம்பா அல்லது தாளடி சாகுபடி செய்ய விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இதற்கிடையே கோடை நெல் சாகுபடி தஞ்சாவூர் மாவட்டத்தில் 12,809 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. திருவிடைமருதூர், திருப்பனந்தாள் போன்ற பகுதிகளில் 70 சதவீதம் அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டன. இதையடுத்து இப்பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

Tags:    

Similar News