காவல் கண்காணிப்பாளர் அறையில் தற்கொலைக்கு முயன்ற கூலி தொழிலாளி
தேனி காவல் கண்காணிப்பாளர் அறையில் கூலி தொழிலாளி தற்கொலைக்கு முயன்றதால் தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம், கம்பம் நந்தகோபால் தெருவை சேர்ந்தவர் சக்தி மகன் பொம்மையா குமார் (37). இவர் மாடு வளர்ப்பு மற்றும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவரது வீட்டை ஒரு லட்சம் கொடுத்து மூன்றாண்டுகளுக்கு ஒத்திக்கு வாங்கி தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.
வீட்டை காலி செய்து மூன்று ஆண்டுகள் ஆகியும் வீட்டின் உரிமையாளர் ஒத்தி பணம் ஒரு லட்சம் தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக வீட்டு உரிமையாளர் மீது கம்பம் தெற்கு காவல் நிலையத்திலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பலமுறை பொம்மையகுமார் புகார் அளித்தும் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த பொம்மைய குமார் தனது சகோதரி லதா உடன் தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத்தை அவரது அறையில் வைத்து சந்தித்து புகார் மனுவை வழங்கினார்.
யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் காவல் கண்காணிப்பாளர் முன்பாகவே தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
பிறகு அங்குள்ள காவலர்கள் அவரை தடுத்து முதலுதவி அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவல் கண்காணிப்பாளர் அறையில் காவல் கண்காணிப்பாளர் முன்பு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.