லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேர் திருவிழா
பென்னாகரம் அருகே அளேபுரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேர் திருவிழா பென்னாகரம் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவில் அமைந்துள்ளது.ஆண்டு தோறும் வைகாசி மாத பவுர்ணமி அன்று தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் நாள்தோறும் உற்சவம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி அலங்கரித்து வைக்கப்பட்டது. இதையடுத்து பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நஞ்சப்பன், அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் கட்டளைதாரர்கள், நிர்வாகத்தினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இத்தேர்திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.