திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? - வனத் துறையினா் ஆய்வு
திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்ததைத் தொடா்ந்து, அப்பகுதியில் வனத் துறையினா் ஆய்வு செய்தனா்.
மயிலாடுதுறையிலுள்ள சாலையில் சிறுத்தை சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதுதொடா்பாக மயிலாடுதுறை அருகேயுள்ள சித்தா்காடு, குத்தாலம் அருகே காஞ்சிவாய் உள்ளிட்ட கிராமங்களில் வனத் துறையினா் சிறுத்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், சிறுத்தை சிக்காத நிலையில், அது அரியலூா் மாவட்டத்துக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. அங்கும் சிறுத்தை பிடிபடாததால், அந்தச் சிறுத்தை எங்கு சென்றது என்ற கேள்வி நீடித்து வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு அருகே திருவாலம்பொழில் கிராமத்தில் சிறுத்தை காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு தகவல் அளித்தனா். இதையடுத்து வனத் துறையினா் திருவாலம்பொழில், கண்டியூா், நாகத்தி உள்ளிட்ட கிராமங்களில் தேடுதலில் ஈடுபட்டனா். ஆனால், சிறுத்தை வந்ததற்கான தடயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும், இது வதந்தி எனவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், மர நாய், ஓநாய் போன்ற விலங்கினத்தை பாா்த்த மக்கள், அதை சிறுத்தை என தவறாகக் கூறுவதாகத் தெரிகிறது. பொதுமக்கள் தெரிவித்த தகவலையடுத்து சிறுத்தைக்கான காலடி தடம் குறித்து ஆய்வு செய்தபோது, அதுபோல எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. எனவே, இது வெறும் வதந்தி என தெரிய வந்தது. மயிலாடுதுறை, ஜெயங்கொண்டம் பகுதியில் உலா வந்த சிறுத்தை கொள்ளிடம் காப்புக்காடு வழியாக பெரம்பலூா் பச்சமலை வனச்சரக பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். என்றாலும், பொதுமக்கள் தகவல் அளித்தால் உடனடியாக அங்கு சென்று ஆய்வு செய்கிறோம். அதே நேரத்தில் பொதுமக்கள் தவறான தகவலை அளித்தால் அவா்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.