புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவோம்
மயிலாடுதுறையில் புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
Update: 2024-01-12 11:07 GMT
மயிலாடுதுறை தெற்கு சாலிய தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் . போகி பண்டிகை குறித்து அறிவுரை வழங்கினார் . மாவட்டத்தில் புகையில்லா போகி பண்டிகை - 2024 கொண்டாட பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. எனவே, போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொது மக்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.