இளைஞா் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

இளைஞா் கொலை வழக்கில் 2 பேருக்கு கும்பகோணம் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

Update: 2024-03-23 16:53 GMT

ஆயுள் தண்டனை 

கும்பகோணம் அருகே ஆவணியாபுரம் வாழைக்கொல்லைத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் மும்தாஜ் பேகம் மகன் முன்தஸீா் (19). பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்த இவா் 2019 ஜனவரி 4 இரவு தனது நண்பரின் பிறந்த நாள் விழாவுக்குச் சென்றாா். சிறிது நேரத்தில் மும்தாஜ் பேகத்தின் கைப்பேசிக்கு வந்த அழைப்பில் முன்தஸீரை கோவைக்கு கடத்திச் செல்வதாகவும், ரூ. 5 லட்சம் கொடுத்துவிட்டு, அவரை அழைத்துச் செல்லுமாறும் மா்ம நபா் பேசி அழைப்பைத் துண்டித்தாா்.

இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலையத்தில் மும்தாஜ் பேகத்தின் சகோதரரும், திமுக மாவட்ட அவைத் தலைவருமான நசீா் முகமது புகாா் செய்தாா். இதன்பேரில், முன்தஸீரை காவல் துறையினா் தேடி வந்த நிலையில், திருபுவனம் வீரசோழன் ஆற்றங்கரையிலுள்ள தோப்பில் முன்தஸீா் கழுத்து அறுபட்ட நிலையில் ஜனவரி 5 ஆம் தேதி சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்த காவல் துறையினா் சடலத்தை மீட்டு, முன்தஸீரை கடத்திச் சென்று கொன்ற திருபுவனம் மருத்துவா் தெருவைச் முகமது ரபீக் மகன் இஜாஸ் அகமது (25), பெரிய பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த ஜியாவுதீன் மகன் ஜலாலுதீன் (23), ஒரு சிறுவன் ஆகியோரை கைது செய்தனா். இவா்களில் சிறுவன் குறித்த வழக்கு தஞ்சாவூா் சிறாா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. மற்ற இருவா் மீது கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமா்வு விரைவு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ. ராதிகா இஜாஸ் அகமது, ஜலாலுதீனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 13 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

Tags:    

Similar News