வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் பொது கழிப்பிடம்

வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிடத்திற்கு நகராட்சி நிர்வாகம் முன்னுரிமை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2024-06-13 10:29 GMT

பூட்டிக்கிடக்கும் கழிப்பறை

வெள்ளகோவில் நகராட்சி புதிய பஸ் நிலையத்தில் பல மாதங்களாக இலவச பொது சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது. இந்த பஸ் நிலையத்துக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, தாராபுரம், மூலனூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மார்க்கங்களில் செல்லும் அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றது.

பஸ் நிலையத்தில் 15 கடைகள் மற்றும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் வரும் நூற்றுக்கணக்கான மக்களின் அடிப்படை வசதிக்காக பஸ் நிலையம் நுழைவாயிலில் இலவச சிறுநீர் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.

இது பல மாதங்களாக பூட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் அவசரமாக வருபவர்கள் பொது சுகாதார வளாகத்திற்கு அருகில் திறந்தவெளியில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது.

பஸ் நிலையத்தில் மற்றொரு இடத்தில் நகராட்சி கட்டண கழிப்பிடம் செயல்பட்டு வருகிறது. இதன் வருவாய் குறையும் என்பதால் இலவச பொது சுகாதார வளாகம் பூட்டப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே ஏழை எளிய மக்கள் உட்பட அனைவரும் பயன்படுத்தும் இலவச பொது சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளகோவில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News