கேலோ இந்தியா போட்டிகளுக்கான சின்னம், தீம் பாடல் !
தூத்துக்குடி தருவை விளையாட்டு அரங்கத்தில் 6வது தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கலந்துகொண்டு சின்னம் இலச்சினை மற்றும் தீம்பாடலை வெளியிட்டார்.;
Update: 2024-01-12 10:09 GMT
கேலோ இந்தியா போட்டி
தூத்துக்குடி தருவை விளையாட்டு அரங்கத்தில் 6வது தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கலந்துகொண்டு சின்னம் இலச்சினை மற்றும் தீம்பாடலை வெளியிட்டு தெரிவித்ததாவது: சென்னையில் 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வீரர்களே, வீராங்கனைகளே விளையாட்டில் பங்கெடுப்பதற்கு வாருங்கள் என்று வீரமங்கை வேலுநாச்சியார் உருவம் பொறித்த வாகனம் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. விளையாட்டில் பங்கெடுப்பது மிகவும் அவசியமாகும். மாணவர்கள் சோம்பேறிகளாக இருந்தால் வீணாண சிந்தனைகள் உருவாகும். மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு உதவ வேண்டும், பாடங்களை படிக்க வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும், விளையாட வேண்டும். இவ்வாறு இருந்தால் மாணவர்களின் எதிர்காலம் நல்ல முறையில் அமையும். மாணவ, மாணவிகள் எல்லா போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும். பள்ளி பருவத்திலேயே உங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான ஆட்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் எல்லா பள்ளிகளிலும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை நடத்தினார்கள். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு எல்லா இடங்களிலும் மாராத்தான் நடத்தினார்கள். ஒலிம்பியாட் செஸ் போட்டி நடத்தினார்கள். மேலும் ஹாக்கி போட்டி நடத்தினார்கள். அவ்வாறு நிறைய விளையாட்டு போட்டி நடத்தி விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனைத்து தமிழக வீரர்களுக்கும் நிதியுதவி செய்து கௌரவித்தார்கள். அந்த முன்னெடுப்பின் ஒரு நிகழ்வுதான் இந்த கேலோ இந்தியா நிகழ்வு. அகில இந்திய அளவிலான போட்டியை தமிழ்நாடு ஏற்று நடத்துவது பெருமை தருவதாகும். நாமும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று நம்முடைய நண்பர்களையும், குழந்தைகளையும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்வோம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.அந்தோணி அதிஷ்டராஜ், கூடைப்பந்து பயிற்றுநர் ஆர்.ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.