குறைவான கலங்கல் உயரம் -விரைவாக நிரம்பும் ஏரி
குன்றத்துார் அருகே கலங்கலின் உயரத்தை குறைத்து காட்டியதால் ஏரி விரைந்து நிரம்பி அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்படுவதாக விவசாயிகள்புகார் தெரிவிக்கின்றனர்.
Update: 2024-01-10 07:56 GMT
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், சோமங்கலம் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. படப்பை பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி நீரை பயன் படுத்தி, 500 ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஏரியின் கலங்கல் சேதமானதால், 10 ஆண்டுகளுக்கு முன் இடித்து அகற்றி புதிய கலங்கல் கட்டப்பட்டது. அப்போது கலங்கலின் உயரம் 2 அடி குறைத்து கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்த ஏரி இரண்டு நாள் மழை பெய்தாலே விரைந்து நிரம்பி கலங்கல் வழியே உபரி நீர் வெளியேறுகிறது. கடந்த ஆண்டு கன மழையால் அக்டோபர் மாதம் முதல், டிசம்பர் 15ம் தேதி வரை இந்த ஏரி கலங்கல் வழியே உபரி நீர் வெளியேறியது. தற்போது, நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் இந்த ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து மீண்டும் கலங்கல் வழியே உபரி நீர் வெளியேறுகிறது. இந்த ஏரிக்கு நீர்வரத்து அதிகம் என்பதால், ஏரியை துார் வாரி ஆழப்படுத்தி கலங்கல் உயரத்தை அதிகரித்தால் கூடுதலாக தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.