கொடைக்கானல் போல் மாறிய மதுரை மாவட்டம்
மதுரையில் வெப்பமும், புழுக்கமும் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், தூறல் மழையால் திடீர் குளிர் பிரதேசமாக மாறியது.
மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. தென் மாவட்டங்களில் திரும்பிய திசையெல்லாம் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், மதுரை மாநகரில் லேசான மழை மட்டும் பெய்து மக்களை ஏமாற்றியது. வைகை அணையில் திறந்துவிட்ட தண்ணீர் மட்டும், மதுரை வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீரை பார்த்து மதுரை மாநகர மக்கள், சமாதானப்பட்டுக் கொள்ளும்நிலை ஏற்பட்டுள்ளது.
கண்மாய்களில் ஒரளவு தண்ணீர் இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு மழை பெய்யாவிட்டால் கடந்த காலங்களை போல் மதுரையில் தண்ணீர் பற்றாக்குறை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் மாலை வரை அடை தூறல் மழை நிற்காமல் பெய்தது. காளவாசல், திருநகர், திருப்பரங்குன்றம், கப்பலூர், பழங்காநத்தம் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. கே.கே.நகர், அண்ணா நகர், மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை, கே.புதூர், அய்யர் பங்களா, பெரியார் நிலையம், சிம்மக்கல், பை-பாஸ் ரோடு, ஆணையூர், விளாங்குடி போன்ற நகரின் பிற பகுதிகளில் மழைத் தூறல் நிற்காமல் பெய்து கொண்டிருந்தது.
அதனால், இதுவரை வெப்பமும், புழுக்கமும் நீடித்த மதுரை மாநகரம், வழக்கத்துக்கு மாறாக குளிர் பிரதேசம் போல் மாறியது. தென் மேற்கு பருவமழை காலங்களில் குற்றாலத்தில் ஏற்படும் பருவநிலையை போல் மதுரையில் மனதையும், உடலையும் வருடி செல்லும் வகையில், மழை தூறலோடு குளிர்ந்த காற்றும், இதமான காலநிலையும் நிலவியது.வைகை ஆற்றங்கரையோரத்தில் இருந்து மதுரை மாநகரம் பார்ப்பதற்கு ரம்மியமாக காணப்பட்டது. வானம் மேக மூட்டமாகவும், அடை தூறல் மழையும் விடாமல் பெய்ததால் நகர் பகுதியில் வெளிச்சம் குறைந்தது. அதனால், வாகன ஓட்டிகள், சாலையில் செல்வதற்கு முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.