மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தை மாற்ற முடியாது- உயர்நீதிமன்றம்!
மதுரை மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தை தற்போது மாற்ற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மதுரை மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தை தற்போது மாற்ற முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் மதுரை மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை வேறு இடத்துக்கு மாற்றும்படி தற்போது உத்தரவிட இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தேர்ந்தெடுத்ததை எதிர்த்து மாணவர் சங்க தலைவர் ராஜ் முகமது உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், மதுரையில் முக்கிய கல்வி நிறுவனமான மருத்துவக் கல்லூரியை வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்துவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. கல்லூரியுடன் மருத்துவமனையும் இணைந்துள்ளதால் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகிறது என வாதிடப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், "வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கான கடைசி வாய்ப்பாக தான் கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. 1998-ம் ஆண்டு முதல் மதுரை மருத்துவக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தான் இந்த கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும், மருத்துவக் கல்லூரிக்குப் பதிலாக வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்துவது தொடர்பாக 12 கட்டிடங்களை ஆய்வு செய்தோம். அவை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு உகந்ததாக இல்லை. மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதி மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்துவதால் மாணவர்களின் வகுப்புகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை" என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மதுரை மருத்துவக் கல்லூரியை வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்துவதால், தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பிருந்து, வாக்கு எண்ணிக்கை முடியும் வரை என ஒன்றரை மாதங்கள் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்ற போதும், ஏப்ரல் 19ம்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை மையத்தை மாற்றும்படி உத்தரவிடுவது ஆலோசனைக்கு உரியதாக இருக்காது.
அது சாத்தியமானதும் அல்ல. தொழிற்கல்வி கல்லூரிகளை வாக்கு எண்ணிக்கை மையங்களாக தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். மதுரை சிறிய நகரம் அல்ல, பல அரசு கட்டிடங்கள் உள்ளன. எனவே, எதிர்காலத்தில் மதுரை மருத்துவ கல்லூரியை வாக்கு எண்ணிக்கை மையமாக தேர்தல் ஆணையம் தேர்வு செய்யாது என எதிர்பார்க்கிறோம் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.