நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு: இருவர் பணியிடை நீக்கம்
நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு தொடர்பாக இரண்டு பேரை பணியிடை நீக்கம் செய்து உயர் அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-22 09:19 GMT
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள திங்களூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு தொடர்பாக பட்டியல் எழுத்தர் உள்பட இருவர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநரின் உத்தரவின்படி, சென்னை தலைமை அலுவலக விழிப்புப் பணி அலுவலரும், கூடுதல் பதிவாளருமான நா. வில்வசேகரன் தலைமையில் விழிப்புக் குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை புதன்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது, திருவையாறு அருகே திங்களூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பல்வேறு முறைகேடுகள் கண்டறிப்பட்டதில், கொள்முதல் நிலையப் பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதைக் கண்காணிக்கத் தவறிய கொள்முதல் அலுவலர் கொள்முதல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும், கொள்முதல் நிலையங்களில் முறைகேடு கண்டறியும்பட்சத்தில் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மற்றும் கொள்முதல் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இதேபோல, கடந்த வாரம் ஒரத்தநாடு அருகே பஞ்சநதிக்கோட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு காரணமாக இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.