பேராவூரணி அருகே காசோலை மோசடியில் ஈடுபட்டவர் கைது
பேராவூரணி அருகே காசோலை மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூணி அருகே காசோலை மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பேராவூரணி அருகே உள்ள வேம்பங்குடியைச் சேர்ந்தவர் நடராஜன்.
இவரிடம் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த செல்லையன் மகன் நாகராஜன் என்பவர் தனது தேவைக்காக வாங்கிய கடனுக்காக ரூ.20 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு செக் வழங்கியிருந்தார். அந்த காசோலையை நடராஜன் வங்கியில் செலுத்திய போது போதிய பணம் இல்லை என திரும்பி வந்துவிட்டது.
இது குறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை விரைவு நீதிமன்றத்தில் நடராஜன் தொடர்ந்த வழக்கில் நாகராஜன் காசோலை மோசடி செய்ததற்காக ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.20 லட்சத்து 75 ஆயிரத்தை உடனடியாக செலுத்த தவறினால் மேலும் 4 மாதமும் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து தண்டனையை எதிர்த்து நாகராஜன் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
முதன்மை நீதிமன்றத்தில் தண்டனை உறுதி செய்யப்பட்டு, மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாகராஜன் மேல்முறையீடு செய்தார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த மார்ச் மாதம் கீழமை நீதிமன்றத் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் சத்யா, காசோலை மோசடியில் ஈடுபட்ட நாகராஜன் மீது பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
இதையடுத்து பேராவூரணி காவல்துறையினர் நாகராஜனை கைது செய்து, பட்டுக்கோட்டை விரைவு நீதிமன்றத்தில் நேர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் நாகராஜன் அடைக்கப்பட்டார்.