மாவோயிஸ்ட் தம்பதி வழக்கு ஜீலை 12-க்கு ஒத்திவைப்பு!
திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மாவோயிஸ்ட் தம்பதியரான ரூபேஸ், சைனி ஆகியோரின் வழக்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் ஜூலை 12-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ரூபேஸ் மற்றும் அவரது மனைவி சைனி, அனூப், கண்ணன் மற்றும் வீரமணி ஆகியோரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். இதில் மாவோயிஸ்ட் தம்பதியரான ரூபேஸ், சைனி ஆகியோர் திருப்பூரில் தங்கியிருந்தபோது, போலி ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டுகள் பெற்றதாக கூறி, திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணைக்காக கேரள மாநிலம் வையூர் மத்திய சிறையில் இருந்து ரூபேஸ் பலத்த போலீஸார் பாதுகாப்புடன் நேற்று அழைத்து வரப்பட்டார். அதேபோல் பிணையில் இருக்கும் சைனி ஆகியோர் நேற்று ஆஜராகினர். மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் முன்னிலையில் தம்பதியர் ஆஜராகினர். தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதையடுத்து ரூபேஷை கேரள போலீஸார், வையூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.