சந்தைக் கடை மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்!

ஊட்டி சந்தைக் கடை மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சொரிதலுடன் துவங்கியது.

Update: 2024-03-16 12:37 GMT

மாரியம்மன் கோவில் திருவிழா

நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக ஊட்டி சந்தைக் கடை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதே போல் நடப்பாண்டில் நேற்று இரவு வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்குகியது. கணபதி ஹோமம், நவகலச பூஜை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து பூரதம் புறப்பாடுடன் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதல் நடக்கிறது. இதை தொடர்ந்து 18ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை தினமும் மாலை ஒவ்வொரு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அமைப்பினர், உபயதாரர்கள், குறிப்பிட்ட சமூகத்தார் சார்பில் நடத்தப்படுகிறது. முக்கியமாக ஆதிபராசக்தி, துர்க்கை, கொடுங்களூர் அம்மன், ராஜகாளியம்மன், ஹெத்தையம்மன், மகா மாரியம்மன் உள்பட பல்வேறு அலங்காரத்துடன் வாகனங்களில் எழுந்தருளிகிறார். வருகிற ஏப்ரல் 12ம் தேதி முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியும், 15ம் தேதி தேர் கலசம் ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 16ம் தேதி மதியம் 1.55 மணிக்கு நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், 8 மணிக்கு பட்டு பரிவட்டம் சாத்துப்படி, 8.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு சிறப்பு கனகாபிஷேகம் நடைபெறுகிறது. முன்னதாக தினசரி கோவில் நடை காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு சாத்தப்பட உள்ளது.
Tags:    

Similar News