காசநோய் குறித்த ஊடகத்துறைக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

கிருஷ்ணகிரியில் காசநோய் குறித்த ஊடகத்துறைக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

Update: 2024-06-30 04:02 GMT

விழிப்புணர்வு கருத்தரங்கு

கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் அரங்கில் மத்திய அரசின் காசநோய் தடுப்புத் திட்டத்தினை செயல்படுத்திடும் 'ரீச்' என்கிற தொண்டு நிறுவனமும் காசநோய் தடுப்புத்துறையும் இணைந்து காசநோய் குறித்த ஊடகத்துறைக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குநர்(காசநோய் பிரிவு) மருத்துவர் சுகந்தா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலர் ராஜேஸ்வரன், காசநோயை வென்றவர்கள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் சிவரஞ்சனி ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்ட பிரஸ் கிளப் செயலாளர் திருலோகசந்தர் வரவேற்றார்.

இக்கருத்தரங்கில் துணை இயக்குநர் பேசுகையில், 'காசநோய் என்பது காற்றில் பரவும் ஒரு தொற்று நோய்க் கிருமி தான். மேலும், அது மனிதனுடைய உடம்பிற்குள் சென்று தங்கிவிடும். மனிதனின் ஊட்டச்சத்து, சர்க்கரை நோய், எச்ஐவி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும்போது, காசநோய் கிருமி தூண்டப்பட்டு அது காசநோயாக மாற வாய்ப்புள்ளது . ஒரு மனிதனுக்குள் 2 வாரத்திலோ அல்லது 2 வருடத்திலோ பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இந்த காசநோய் என்பது ஓரிரு நாட்களில் வந்த நோய்த்தொற்று அல்ல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது. சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் எகிப்திய நாட்டில் உள்ள மம்மிக்களை ஆய்வு செய்தபோது, அவர்களின் எலும்புக்கூடுகளில் காசநோய் கிருமிகள் இருந்ததாக கண்டறிந்துள்ளனர். அவர்கள் காசநோயினால் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகின்றது. அதிகளவில் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டவர்களால் தான் இந்த காச நோய்ப் பரவும். எனவே, தமிழக அரசு சார்பில் மொபைல் எக்ஸ்ரே வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனம் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலைகிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

2 வாரத்திற்கு மேல் இருமல், காய்ச்சல், எடை இழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சோதனை செய்துகொள்ள வேண்டும் . இந்த காசநோய்க்கு 4 விதமான மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அந்த மாத்திரைகள் அனைத்தும் ஒரு காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் எடைக்கு தகுந்தார்போல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த மாத்திரைகள் காசநோயின் வீரியத்திற்கு தகுந்தார்போல் அவர்களுக்கு எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். இந்த மாத்திரைகள் எடுத்துக்கொண்ட 2 வாரம் முதல் 7 மாதங்களுக்குள் காசநோயின் கிருமிகள் முற்றிலும் குணப்படுத்தப்படும். இந்த மாத்திரைகள் அனைத்தும் மத்திய, மாநில அரசுகளால் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

இதில், காசநோய் மையத்தின் சார்பாக கோபிநாத், ஷெரீப், கவுரவ தலைவர்கள் அசோக்பாபு, ரமேஷ், பழனிவேல், பொருளாளர் ரவி, துணை செயலாளர் பிரபு, முன்னாள் செயலாளர் விஜயபிரபாகரன் உட்பட 40க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News