திருமருகலில் மருத்துவ பணியாளர்கள் வேலை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

திருமருகலில் இரவு நேர செவிலியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவ பணியாளர்கள் வேலை நிறுத்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளகி வருகின்றனர்.

Update: 2024-02-02 09:45 GMT

மருத்துவ பணியாளர்கள் வேலை நிறுத்தம் 

திருமருகலில் இரவு நேர செவிலியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவ பணியாளர்கள் வேலை நிறுத்ததால் பொதுமக்கள் அவதி நாகை மாவட்டம் திருமருகலில் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

இங்கு நேற்று முன்தினம் இரவு செவிலியர் தினேஷ் (வயது 35),மருத்துவ பணியாளர் இளங்குமரன் (வயது 35) துப்புரவு பணியாளர் லலிதா (வயது 45) ஆகிய மூவரும் இரவு நேர பணியில் இருந்துள்ளனர்.

அப்போது நள்ளிரவில் பெண் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவ சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.அங்கு டாக்டர் இல்லாத காரணத்தினால் முதலுதவி செய்துள்ளனர்.

இதில் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் சிலர் மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை என்றால் எதற்கு மருத்துவமனை என்று பணியில் இருந்த தினேஷ்,இளங்குமரன்,லலிதா ஆகிய மூவரையும் தகாத வார்த்தைகளில் திட்டி கையால் தாக்கி உள்ளனர்.இதில் காயம் அடைந்த தினேஷ் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.இந்த நிலையில் இரவு நேரங்களில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்,

பணியாளர்களை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருமருகல் அரசு ஆரம்ப சுகாதாரத்தில் நிலையத்தில் பணியாற்றும் டாக்டர்,செவிலியர்கள்,சுகாதார ஆய்வாளர்,மருந்தாளுனர்கள் பயிற்சி செவிலியர்கள் அனைவரும் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் மருத்துவ பணியாளர்களிடம் நேரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

மேலும் காவல்துறை மூலம் பணியாளர்களை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,இரவு நேர பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததை அடுத்து மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 3 மணி நேரம் மருத்துவ பணிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

Similar News