சென்னை வர்த்தக மையம் முதல் போரூர் வரை மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்
சென்னை வர்த்தக மையம் முதல் போரூர் வரை மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை வர்த்தக மையம் – போரூர் இடையே மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் 3 வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில்,
பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்தப் பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5வது வழித்தடத்தில் 39 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும், 6 சுரங்க மேட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த வழித்தடத்தில் மேம்பாலப்பாதை பணிகள் பல்வேறு இடங்களில் தீவிரமடைந்து உள்ளன. தற்போது வரை 500க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக போரூர் சந்திப்பு – சென்னை வர்த்தக மையம் இடையே மேம்பாலப்பாதைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் தூண்கள் நிறுவி அதற்கு மேல் கர்டர்கள் அமைத்து, உயர்மட்டப் பாதைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. முகலிவாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.
இதில் ராமாபுரம் முதல் கிண்டி வரை தூண்கள் மற்றும் நிலையங்கள் அமைப்பதற்கான மேலும் சில காலங்கள் ஆகும். குறுகிய பகுதி என்பதால் போக்குவரத்து முழுமையாக மாற்றப்பட்ட பின் பணிகள் முழுவீழ்ச்சி நடைபெற்றும்.
இதற்காக மெட்ராஸ் வார் கல்லறை அருகே வாகனங்கள் திருப்பிவிடப்பட உள்ளது. அதன்பின்னர் பணிகள் மெற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.