மண்டைக்காடு கோவிலில் நள்ளிரவில் பரணிக்கொடை விழா

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு கோவிலில் நள்ளிரவில் நடைப்பெற்ற மீனபரணி கொடை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-04-11 10:00 GMT

மீன பரணிகொடை

குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. இங்கு கடந்த மாதம் 3-ந் தேதி மாசிக்கொடை விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி மார்ச் 12-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான நேற்று மீன பரணிக்கொடை விழா நடந்தது. இதையொட்டி காலை, மாலை பூஜைகள் 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை தொடங்கியது.

ஒரு ஆண்டில் 3 முறை மட்டுமே நடக்கும் இந்த பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி இந்த பூஜை மாசி திருவிழாவின் ஆறாம் நாள், மீனபரணி கொடை விழாவன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும்தான் இந்த பூஜை நடத்தப்படும். வலியபடுக்கை மகா பூஜையில் அம்மனுக்கு அவல் பொரி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தினை மாவு, தேங்காய், பழ வகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டது.

அப்போது அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வலியபடுக்கை பூஜை நடந்தபோது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளாவிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News