10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த மினி பஸ் டிரைவர் கைது
சேலம் மாவட்டம், எட்டிக்குட்டபட்டி பகுதியில் 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த மினி பஸ் டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த எட்டிகுட்டப்பட்டி ஊராட்சி அடைக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் வினோத் (வயது 35), மினி பஸ் டிரைவர். இவர் மேட்டூர் புதுசாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடந்த மாதம் 23-ந் தேதி அழைத்துச் சென்று மாட்டுக்காரன் புதூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு உள்ளார்.
பின்னர் அடைக்கனூரில் ராமச்சந்திரன் வீட்டில் கணவன்-மனைவியாக இவர்கள் வசித்து வந்தனர். இந்த குழந்தை திருமணம் தொடர்பாக சேலம் மாவட்ட குழந்தைகள் நல விரிவாக்க அலுவலர் லலிதாவிற்கு கிடைத்த புகாரின் பேரில், அவர் விசாரணை நடத்தினார். இதில் 15 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து கணவன்-மனைவியாக வினோத் வசித்து வருவதும், திருமணத்திற்கு வினோத்தின் தாயார் வள்ளி மற்றும் சிறுமியின் தாயார் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்த வினோத், திருமணத்திற்கு உதவியாக இருந்த வள்ளி, சிறுமியின் தாயார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குழந்தைகள் நல விரிவாக்க அலுவலர் லலிதா ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்ேபரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மினி பஸ் டிரைவரான வினோத்தை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள வள்ளி மற்றும் சிறுமியின் தாயாரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.