ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்- அமைச்சர்
இந்தியாவிலேயே தமிழக பள்ளிக்கல்வித்துறை தான் முதல் இடத்தில் உள்ளது. பள்ளிகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி ஒரே நேரத்தில் 8500 ஆசிரியர்களை இணையதள வாயிலாக ஒன்றிணைத்து விரிவான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல. அது பெருமையின் அடையாளம் .எனவே அரசு பள்ளியில் கல்வி கற்று கொடுக்கக்கூடிய ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகன் விருது உள்ளிட்ட மாநில அளவிலான விருதுகள் வழங்கும் விழா திருச்சி கலையரங்கத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி விளக்க உரையாற்றினார். விழாவில் 100 ஆசிரியர்களுக்கு அண்ணா தலைமைத்துவ விருதும்,76 ஆசிரியர்களுக்கு பேராசிரியர் அன்பழகன் விருதும் வழங்கி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார்
அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கு இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற துறைகளை காட்டிலும் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகமான நிதியை ஒதுக்கி முதல்வர் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக தான் பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை 3521 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழக பள்ளிக்கல்வித்துறை தான் முதல் இடத்தில் உள்ளது. பள்ளிகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி ஒரே நேரத்தில் 8500 ஆசிரியர்களை இணையதள வாயிலாக ஒன்றிணைத்து விரிவான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இதுவரை 136 தொகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என அனைத்து பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று அங்கு இருக்கக்கூடிய கட்டுமான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உள்ளேன். எ
னவே, தலைமை ஆசிரியர்கள் தங்களுடைய பள்ளிகளில் உள்ள கட்டுமான குறைகள் குறித்து அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அதை உடனடியாக சரி செய்து கொடுப்பது அரசின் கடமை. அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல. அது பெருமையின் அடையாளம் .எனவே அரசு பள்ளியில் கல்வி கற்று கொடுக்கக்கூடிய ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். அவர்களை கண்காணிப்பது தலைமை ஆசிரியரின் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மண்டலக்குழு தலைவருமான மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் நன்றி கூறினார்.