பெரிய புளியம்பட்டி கிராமத்தில் தொடக்கப் பள்ளியை அமைச்சர் திறந்து வைப்பு
விருதுநகர் மாவட்டம்தண்டியனேந்தல் ஊராட்சி, பெரிய புளியம்பட்டி கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை அமைச்சர் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், தண்டியனேந்தல் ஊராட்சி, பெரிய புளியம்பட்டி கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தலைமையில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்: காரியாபட்டி ஒன்றியம் , தண்டியனேந்தல் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பெரியபுளியம்பட்டி கிராமத்தில் அரசு சாரா அசேபா தொண்டு நிறுவனத்தின் சார்பாக சுயநிதி பிரிவில் தமிழ் வழியில் தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அசேபா தொண்டு நிறுவனம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளியை நடத்த இயலவில்லை என முறையாக கடிதம் அனுப்பி பள்ளியை மூடிவிட்டனர். அசேபா தொண்டு நிறுவனம் பள்ளியை முறையாக கடிதம் வழங்கி தகவல் தெரிவித்து,
மூடிய நிலையில் இக்கிராமத்தை சார்ந்த 40 க்கும் அதிகமான மாணவர்கள் அருகில் உள்ள சின்ன புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக கல்வி பயின்று வந்தனர். பெரியபுளியம்பட்டி கிராமத்தின் அருகில் உள்ள சின்னபுளியம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியானது 300 மீட்டர் தொலைவில் உள்ளது எனவும்,
பெரியபுளியம்பட்டி கிராமத்திற்கும், சின்னபுளியம்பட்டி கிராமத்திற்கும் இடையில் ஒரு பெரிய ஓடை செல்வதால், பெரியபுளியம்பட்டியிலிருந்து மாணாக்கர்கள் ஓடையினை கடந்து செல்வதற்கு சிரமமான சூழ்நிலை உள்ளது எனவும், மேலும், கிராம மக்கள் தங்களது கிராமத்தில் பள்ளி வயது குழந்தைகள் 40 பேர் இருக்கிறார்கள் எனவும், தங்களது கிராமத்திற்கு அரசு தொடக்கப் பள்ளி வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.
இந் நிலையில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு அரசு இக் கிராமத்தில் தொடக்கப்பள்ளி தொடங்க அரசாணை பிறப்பித்து உத்திரவிட்டுள்ளது. அதன்படி, அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட இந்த தொடக்கப் பள்ளியை அரசு தொடக்கப்பள்ளியாக அரசாணையின் மூலம் ஈர்க்கப்பட்டு, இப்பள்ளிக்கு புதிதாக பணியிடம் எதுவும் தோற்றுவிக்காமல், மாவட்டத்தில் மிகை பணியிடத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை இப்பள்ளிக்கு மாற்றம் செய்ய ஆணையிடப்பட்டு, இப்பள்ளி தொடர்ந்து செயல்பட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இப்பகுதியில் உள்ள மாணவர்கள் இந்த பள்ளியை நல்ல முறையில் பயன்படுத்தி, வாழ்வில் ஒரு உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தெரிவித்தார்.