விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க எம்.எல்.ஏ ரவி கோரிக்கை
நிமிலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெமிலி, சயனபுரம், நாகவேடு, கீழ் வெங்கடாபுரம், சிறுணமல்லி, ரெட்டிவலம், அகவலம், வேட்டாங்குளம், உளியநல்லூர், துறையூர், பிள்ளைப்பாக்கம், ஜாகீர்தண்டலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடித்து வருகிறது. மேலும், குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் மின் மோட்டார்கள் பழுதாகி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் பயிருக்கு சரியாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல். நெற்பயிர்கள் காய்ந்து கருகி உள்ளது. கடந்த சில வாரங்களாக எப்போது மின்சாரம் வரும் என்று கிணற்று மேட்டு அருகே விவசாயிகள் இரவு, பகலாக காத்திருக்கின்றனர்.
ஆகவே உடனடியாக தமிழக அரசு விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரமும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும். இல்லையெனில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனுமதியுடன், அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்துவோம் என அதில் கூறப்பட்டுள்ளது.