வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகாரளித்துள்ளனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணத்தை வாங்கிக் கொண்டு, மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நபர்கள் மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த அறிவு மூசா , பிரசாத் மற்றும் கேரளாவை சேர்ந்த அன்பு முபாரக் ஆகிய மூன்று பேர் மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுத்தனர். அந்தப் புகார் மனுவில், மதுரை திருநகர் பகுதியில் உள்ள சாஸ்தா ட்ராவல்ஸ் மற்றும் டூரிசம் நிறுவனத்தின் உரிமையாளர் விக்னேஸ்வரன் இணையத்தில் ஒரு விளம்பரம் ஒன்று கொடுத்திருந்தார்.
அந்த விளம்பரத்தில் வெளிநாட்டில் ஒரு லட்சம் ரூபாய் ஊதியத்துடன் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்திருந்தால். அந்த விளம்பரத்தை கண்ட நாங்கள் அவரை நேரில் சந்தித்து பேசிய போது இந்த வேலைக்கு கட்டணமாக 5 லட்ச ரூபாய் செலுத்துமாறு தெரிவித்தார். நாங்கள் மூன்று தவணையாக அந்த பணத்தை அவரிடம் செலுத்தினோம். எங்களுடன் சேர்த்து மொத்தம் ஏழு பேரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே சென்றவுடன் அவர் தலைமறைவு ஆகிவிட்டார். மூன்று மாதம் வெளிநாட்டிலேயே அவரைத் தேடி விட்டு, இந்தியா வந்த நாங்கள் அவர் அலுவலகம் சென்று முறையிட்டபோது இந்த வேலை தற்போது இல்லை என்றும், தங்களுக்கு இந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை 45 நாட்களில் கொடுத்து விடுவதாக பத்திரத்தில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தார்.
ஆனால் தற்போது ஒன்பது மாதம் ஆகியும் இதுவரை தங்களுக்கு, தாங்கள் செலுத்திய பணத்தை கொடுக்கவில்லை. நேரில் சென்று பார்த்தபோது அந்த அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அவரது மூன்று தொலைபேசி எண்களும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் புகார் மனுவில் தெரிவித்த அவர்கள், தங்களை ஏமாற்றியவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டு தர கோரி மதுரை மாநகர காவல் துறை ஆணையரிடம் கொடுத்த புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.