500க்கும் மேற்பட்ட பெண்கள்,பொதுமக்கள் சாலை மறியல்
இடங்கணசாலை நகராட்சி பகுதியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இடங்கணசாலை நகராட்சி சின்ன ஏரி பகுதியில் தமிழக அரசு 8.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை நடைபெற்றது. இவ்விடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் கடந்த மாதம் மீண்டும் இப்பணியை தொடங்கியபோது அப்பகுதியைச் சேர்ந்த விவசாய ஒருவர் உயர்மின் கோபுரத்தில் ஏரி போராட்டத்தில் ஈடுபட்டார் இதுபோல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மீண்டும் பணி தொடங்கப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டியும், தங்களது வீட்டின் முன்பு கருப்பு கொடி கட்டியும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் . இந்நிலையில் மீண்டும் இன்று பணி தொடங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் இன்று 500க்கும் மேற்பட்டோர் இடங்கணசாலை நகராட்சி குடோன் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள பிரதான சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.