குண்டும் குழியுமான சாலை - வாகன ஓட்டிகள் கடும் அவதி
குண்டும் குழியுமாக உள்ள பனப்பாக்கம்-பள்ளூர் செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே திருமால்பூர் பகுதியில் பனப்பாக்கம்-பள்ளூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பஸ், லாரி, மோட்டார் சைக்கிள் என்று தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது.
பனப்பாக்கம், ஜாகீர்தண்டலம், நெல்வாய், காட்டுகண்டிகை, ரெட்டிவலம், சிறுவளையம், மேலபுலம், நெடும்புலி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னை, காஞ்சீபுரம், அரக்கோணம் பகுதிகளுக்கு கல்லூரி, வேலை, மருத்துவமனை உள்ளிட்டவைகளுக்காக செல்ல தினமும் பள்ளூர் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர்.
இப்பகுதிகளில் கடந்த ஒருவாரமாக மழை பெய்ததால் சேதமடைந்த சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் இந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்லும்போது சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கி கீழே விழுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் இருங்காட்டுகோட்டை, சுங்குவாரச்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் மோட்டார் சைக்கிளில் வரும்போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, சேதமடைந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.