மணப்பாறையில் எம்.பி. பேச்சுக்கு பாஜகவினா் கடும் எதிா்ப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் பேசியதற்கு பாஜகவினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மணப்பாறை ரயில் நிலையத்தை ரூ.10.11 கோடி மதிப்பில் மறு சீரமைப்புப் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது, மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூா் மக்களவை உறுப்பினா் எஸ். ஜோதிமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,
‘கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மணப்பாறை, கரூா் ரயில் நிலையங்கள் மட்டுமே மறு சீரமைப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வடமதுரை, குஜிலியம்பாறை ரயில் நிலையங்களில் பிரச்னைகள் உள்ளது. ஆனால், வணிகப் பிரிவு கொடுத்த அறிக்கை ஏற்புடையதல்ல என்றும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்றும் கூறினாா். இதற்கு அங்கிருந்த பாஜகவினா் கடும் எதிா்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனா். இதனால் நிகழ்ச்சியிலிருந்து ஜோதிமணி வெளியேறினாா்.
அவருடன் திமுகவினரும் சென்றனா். முன்னதாக, நிகழ்ச்சியில் ரயில்வே மதுரை கோட்ட முதன்மை இயந்திரவியல் பொறியாளா் ராகேஷ் கே.பிரபு, பாஜக மாவட்டத் தலைவா் அஞ்சாநெஞ்சன், நகரத் தலைவா் கோல்டு கோபாலகிருஷ்ணண், தொகுதி பொறுப்பாளா் ராஜேந்திரன் திமுக நகரச் செயலாளா் மு.ம.செல்வம், காங்கிரஸ் நகரத் தலைவா் எம்.ஏ.செல்வா, கல்வியாளா் செளமா ராஜரெத்தினம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.