அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள் - 5 பேர் படுகாயம்
அரவக்குறிச்சி அருகே கார்கள் மற்றும் இருசக்கர வாகனம் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர், பாலப்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கபிலன் வயது 21. கார் டிரைவர். இவரது காரில், அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி வயது 74, சிவகுமார் வயது 45, மதிவதனன் வயது 70, திருமூர்த்தி வயது 47 ஆகியோருடன் ஜூன் 22 ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், கரூர் - திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
இவரது கார் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட, செல்லாஸ் ஹோட்டல் அருகே வந்த போது, எதிர் திசையில், கரூர், தாந்தோணி மலை, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த தண்டபாணி வயது 45 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு கார், அதே நேரத்தில் இச்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த நல்லுசாமி வயது 73 என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதி, நிலை தடுமாறி மேலும் கபிலன் ஓட்டிய கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில், கபிலன் ஓட்டி வந்த காரில் பயணித்த சுப்பிரமணி, சிவகுமார், மதிவதனன், திருமூர்த்தி மற்றும் கபிலன் ஆகிய ஐந்து பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், இவர்கள் அனைவரையும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கபிலன் அளித்த புகாரின் பேரில் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்படுத்திய தண்டபாணி மற்றும் விபத்து ஏற்பட காரணமாக நல்லுசாமி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.