முக்கொம்பு காவிரி தடுப்பணையில் கதவணைகள் புனரமைக்கும் பணி தொடக்கம்
முக்கொம்பு காவிரி தடுப்பணை கதவணைகள் புனரமைக்கும் பணி மற்றும் கொள்ளிடம் மேலணையில் உள்ள தற்காலிக தடுப்பணையை இடிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியுள்ளன.
Update: 2024-02-23 02:31 GMT
திருச்சி மாவட்டம், முக்கொம்பில் உள்ள 182 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மேலணை கடந்த 2018 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பகுதியளவில் சேதமடைந்தது. இதில், கதவணையின் 9 மதகுகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதைத் தொடா்ந்து, ரூ.38.85 கோடி மதிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு தற்காலிக காப்பு அணை கட்டப்பட்டது. இது அந்த அணையை பலப்படுத்தி பாதுகாப்பாக வைத்திருந்தாலும் புதிய கதவணையும் ரூ.387.60 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தச்சூழலில், கா்நாடகத்தில் உள்ள நீா்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்துவரும் மழையால் கிடைக்கும் உபரிநீா் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் தருணங்களில் கொள்ளிடத்தில் பிரித்து அனுப்புவதில் தற்காலிக காப்பணை இடையூறாக உள்ளது. புதிய கதவணை இல்லாத தருணங்களில் பாதுகாப்பு அரணாக இருந்த தற்காலிக காப்பணையானது, புதிய கதவணை கட்டப்பட்ட பிறகு இடிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஏனெனில், சேதமடைந்த கதவணையில் ஷட்டா்கள் வழியாக தண்ணீரை வெளியேற்றலாம். ஆனால், சேதமடைந்த பகுதியில் மதகு எண் 4 முதல் 16 வரையில் கட்டப்பட்டுள்ள தாற்காலிக காப்பணையில் ஷட்டா்கள் கிடையாது. முழுவதும் கான்கீரீட் கட்டமைப்புதான். எனவே, வெள்ள நீரை தேக்கி வைத்து தேவையான தருணங்களில் வெளியேற்ற முடியாது. வெள்ளக் காலங்களில் காப்பணை இடையூறாவே உள்ளது. எனவே, இதனை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அலுவலா்கள் திட்டமிட்டு அரசுக்கு பரிந்துரை செய்தனா். அரசின் ஒப்புதல் பெற்று, காப்பணை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இந்தாண்டு மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுவதற்கு முன்பாக காவிரி கதவணையில் உள்ள மதகுகளில் பொருத்தப்பட்டுள்ள ஷட்டா்களையும் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.