முத்துமலை பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம்
பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் முத்துமலை பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரம் குரால்நத்தம் கிராமத்தில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் முத்துமலையில் மகாகணபதி, பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகா கணபதி, பால தண்டாயுதபாணி மற்றும் பரிவார தெய்வங்களான இடும்பன், அரசமரத்து விநாயகர் ஆகிய சாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 26-ந் தேதி காலையில் யாகசாலை முகூர்த்தகால் போடுதல், கால்கோள் விழாவுடன் தொடங்கியது.
விழா நாட்களில் யாக சாலை பூஜைகள், ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூைஜகள் நடந்தன. தொடர்ந்து மங்கள இசை, விநாயகர் பூஜை, 6-ம் கால யாக பூஜையும், முத்துமலை அடிவாரம் அரசமரத்து விநாயக பெருமானுக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. பின்னர் விமான கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகமும், கருவறையில் வீற்றிருக்கும் பாலதண்டாயுதபாணி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. கோவிலில் மகா அபிஷேகம், தச தானம், தச தரிசனம், மகா தீபாராதனையும் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முத்துமலை பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நல அறக்கட்டளை மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து இருந்தனர். கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதை தொடர்ந்து கோவிலில் 48 நாட்கள் மண்டல பூஜை தொடங்கியது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் கும்பாபிஷேக விழா ஒருங்கிணைப்பாளர் குரால்நத்தம் கணேசன் அப்பாவு குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.