மர்ம காய்ச்சல் - எட்டு வயது சிறுமி உயிரிழப்பு !

ஸ்ரீவில்லிபுத்தூரில் மர்ம காய்ச்சலுக்கு ஒரு குழந்தை பலியான நிலையில் மீதமுள்ள குழந்தைகளை காப்பாற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-03-19 06:38 GMT

சிறுமி உயிரிழப்பு 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட மேலக்கோபாலபுரம் ஊராட்சி பகுதியில் சுமார் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு காய்ச்சல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். 4 வயது முதல் 15 வயதிற்க்கு உட்பட்ட குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர் .இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகம் எந்த விதமான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் ஆனந்தவள்ளி ( 8 ) என்ற சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சிறுமி உயிர் இழந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் உறவினர்கள் விசாரித்த போது குழந்தைக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கும் தான் தாங்கள் சிகிச்சை அளித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சிகிச்சை பெற்று குணமடைந்த அனைத்து குழந்தைகளும் தற்போது அவர்களது வீடுகளில் பெற்றோர்களின் தீவிர கண்காணிப்பில் ஓய்வெடுத்து வருகின்றனர்.மேலும் சிலர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தங்கள் பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக காய்ச்சல் நீடித்து வருவதாகவும் தற்போது மர்ம காய்ச்சலுக்கு ஒரு குழந்தை பலியான நிலையில் மீதமுள்ள குழந்தைகளை காப்பாற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News