NABCB : தரச்சான்று மானிய திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு பெறும் சர்வதேச அல்லது NABCB ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள் மூலம் பெறப்படும் தர சான்றிதழ் பெற தரச்சான்று மானிய திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு மாவட்ட தொழில் மையங்கள் மூலம் பல்வேறு கடன் திட்டங்கள் மற்றும் மானிய உதவிகளை வழங்கி வருகிறது. தொழில் நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தை அதிகரிக்க, சந்தைப்படுத்த மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளைப் பெறவும் பல்வேறு தரச்சான்றுகள் பெற வேண்டி உள்ளது. இவ்வாறாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு பெறும் சர்வதேச அல்லது NABCB ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள் மூலம் பெறப்படும் தர சான்றிதழ் பெற தரச்சான்று மானிய திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தொழில் நிறுவனங்களுக்கான ‘தரச்சான்று(Q-cert)” என்ற திட்டம் 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் உற்பத்தி நிறுவனங்கள் ISO 9000, ISO 14001, ISO 22000, HACCP, GHP, BIS, ZED மற்றும் OEKO-TEX தரச்சான்றிதழ்கள் மற்றும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெற்ற தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட தரச் சான்றிதழ்கள் பெற செலவழித்த கட்டணத்தொகையில் (பயணச் செலவு, தங்;குமிடம், உணவு மற்றும் கண்காணிப்புச் செலவு தவிர்த்து) 100 சதவீதம் (அதிகபட்சமாக ரூபாய் இரண்டு இலட்சம் வரை) தமிழக அரசினால் மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் NABCB ஆல் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் தரச் சான்றிதழ் பெற்ற குறு சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்களும் பயன்பெற தகுதியுடையதாகும். OEKO-TEX போன்ற பன்னாட்டு தரச்சான்று பெறுபவர்களுக்கு ரூ.10.00 இலட்சம் மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், விருதுநகர், (தொலைபேசி எண்கள் முறையே : 90800-78933, 99440-90628) என்ற முகவரியில் அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.