நாமக்கல் தொகுதி: மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஆய்வு..!
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் இயந்திரங்களை தேர்தல் கமிஷன் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது. இதையொட்டி, ஓட்டு எண்ணிக்கை மையத்தை, மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில், மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர் ஓனில் கிளமெண்ட் ஓரியா நேரில் சென்று பார்வையிட்டார். மத்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான ஓட்டுகள் அடங்கிய ஒட்டு மெசின்கள், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன்- 4)காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேசைகள் வீதம் மொத்தம் 84 மேசைகளில் ஓட்டுகள் எண்ணப்படும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் பார்வையாளர் பார்வையிட்டார். மேலும், வேட்பாளர்கள், ஏஜண்டுகள் ஓட்டு எண்ணும் பணியினை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள், அவர்கள் வந்து செல்வதற்கான பாதைகள், ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள போலீசார் விபரம், தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவ துறையினர் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
ஊடகப் பிரிவினர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தி சேகரிக்க ஏதுவாக ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக ஓட்டு எண்ணிக்கையை திறம்பட நடத்துவது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற அரசு அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய பார்வையாளர் கலந்துகொண்டு பேசினார். இந்த ஆய்வுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.