நாமக்கல் ரயில் நிலையத்திற்கு பஸ் சேவை தேவை.!

நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சேந்தமங்கலம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களை நாமக்கல் ரயில் நிலையத்திற்கு உள்ளே சென்று பயணிகளை ஏற்றி இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-25 01:30 GMT

நாமக்கல் ரயில் நிலையத்திற்கு தினசரி 10 முதல் 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. மதுரை , இராமேஸ்வரம், திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் போன்ற தமிழக தென் மாவட்டங்களையும், பெங்களுர்,மும்பை, சூரத் மற்றும் ஜோத்பூர் போன்ற வட மாநில பெரு நகரங்களையும் இணைக்கும் பாலமாக நாமக்கல் ரயில் நிலையம் விளங்குகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு செல்ல பகலில் பஸ் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியூரில் இருந்து நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வருபவர்கள் அரை கிலோமீட்டர் தூரம் மெயின் ரோட்டிற்கு நடந்து வந்துதான் பேருந்து நிலையம் செல்வதற்கு பஸ் ஏற வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது. நாமக்கல் கோழிப்பண்ணை தொழில், டிரான்ஸ்போர்ட் தொழில், ஆன்மீகம் மற்றும் கல்வி நகரம் என்பதால் தினமும் ஏராளமானோர் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். குறைந்த கட்டணத்தில் வசதியாக ரயிலில் சென்று வருவதற்காக பொதுமக்களுக்கு பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் செல்ல பஸ் வசதி தேவைப்படுகிறது.

எனவே நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சேந்தமங்கலம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களை நாமக்கல் ரயில் நிலையத்திற்கு உள்ளே சென்று பயணிகளை ஏற்றி இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் மறுமார்க்கமாக ரயில் நிலையம் வழியாக பஸ்சை இயக்க வேண்டும் அல்லது இதே வழித்தடத்தில் மினிபஸ்கள், ஷேர் ஆட்டோக்களையாவது இயக்க வேண்டுமென்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Tags:    

Similar News