பாஜகவில் பத்தாயிரம் ரவுடிகள் உள்ளனர் - நாஞ்சில் சம்பத் பேச்சு
காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பரப்புரையில் ஈடுபட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் புளியம்பட்டி, பாம்பே மெடிக்கல் சந்திப்பு, எம் எஸ் கார்னர், காந்திநகர் மற்றும் பந்தல்குடி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறீர்களா என கேட்டால் இந்த காரியம் செய்திருக்கிறோம் என்று சொல்வதற்கு அவர்களிடத்தில் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் 20,000 ரவுடிகளை காவல்துறை அடையாளப்படுத்தி கண்காணித்துக் கொண்டிருக்கிறது. என்றால் அதில் 10,000 ரௌடிகள் இருந்த இடம் பிஜேபி கட்சி.
திருப்பூர் தொகுதி பிஜேபி வேட்பாளர் முருகானந்தம் காவல்துறை அதிகாரிகளையே மிரட்டுகிறார். பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி சங்கிகளை விட்டு வெளியே வந்து விட்டேன் எனக் கூறுகிறார். ஆனால் அவர்களுக்குள்ளான உறவு இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அண்ணா திமுக கட்சியை ஒரு கும்பல் கபளிகரம் செய்ய துடிக்கிறது. பிஜேபி கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறது.அது அவர்களுடைய உரிமை அதைப்பற்றி நான் எதுவும் கூறவில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு பிஜேபி என்ன செய்தது. பெரியாரின் வழிவந்த எம் ஆர் ராதாவின் மகள் ராதிகா அவரது கணவர் சரத்குமார் தனது கட்சியை இரண்டு மணிக்கு கைவிட்டார்.
சரத்குமார் குறைந்த விலைக்கு கட்சியை விட்டு விட்டார் கட்சி தான் விலை போக வேண்டும் நீங்கள் ஏன் விலை போனீர்கள் என விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் திரும்பத் திரும்ப கேட்பது ராதிகாவின் காதில் விழுகவில்லையா. விஜயகாந்தின் புதல்வன் கையறு நிலையில் வந்து நிற்கிறார். நான் கேட்கிறேன் உங்களுக்கு எதற்காக தேர்தல். இன்னும் 25 ஆண்டுகளுக்கு ஸ்டாலின் தான் முதலமைச்சர். நாங்கள் இரவை பகலாக நினைத்து உழைத்திருக்கிறோம்.
ஒரு இறக்குமதி செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பாஜகவின் தலைவர் ஆனால் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துவிடுமா. ஆட்டுக்கும் கிடாய்க்கும் வித்தியாசம் தெரியாமல் சிவகாமி என பெயரிட்ட அரைகுறை ஐஏஎஸ் அதிகாரி ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறார் உங்களிடம் என்ன இருக்கிறது.
இன்றைக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எந்த மாநில நீட்டை விரும்பவில்லையோ அந்த மாநிலத்திற்கு விதிவிலக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பெட்ரோல் ரூபாய் 65க்கு தருவேன் என கூறியுள்ளார்.
அதேபோல கேஸ் சிலிண்டர் ரூ 600க்கு தருவேன் என கூறியுள்ளார் நிச்சயமா அவர் வழங்குவார் நீங்கள் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பேசினார்.