நரசிம்மர் கோயில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றம்
நாமக்கலில் மார்ச் 26–ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நரசிம்மர் சுவாமி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றம் நரசிம்மர் கோயில் வளாகத்தில் இன்றுகாலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. இதனையடுத்து, 19–ஆம் தேதி பல்லக்கு புறப்பாடு, சிம்ம வாகனத்தில் சுவாமி உலா, 20–ஆம் தேதி அனுமந்த வாகனம், 21–ஆம் தேதி கருட வாகனம், 22–ஆம் தேதி சேஷ வாகனம், 23–ஆம் தேதி யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வைபவம் நடைபெறுகிறது. 24–ஆம் தேதி மாலை 6 மணிக்கு நரசிம்மர், நாமகிரி தாயார் திருக்கல்யாணம், 25–ஆம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 26–ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நரசிம்மர் சுவாமி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.
பிற்பகல் 4.30 மணிக்கு அரங்கநாதர், ஆஞ்சனேயர் கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது. 27–ஆம் தேதி கஜலட்சுமி வாகனம் வீதி உலா, 28–இல் வசந்த உற்சவம், 29–ஆம் தேதி விடையாற்றி உற்சவம், 30–இல் புஷ்ப பல்லாக்கு, 31–இல் ஊஞ்சல் உற்சவம், ஏப்ரல் 1–ஆம் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது. தேர் திருவிழாற்கான ஏற்பாடுகளை, அறங்காவலர்கள் குழு தலைவர் கா.நல்லுசாமி, அறங்காவலர்கள் செள.செல்வசீராளன், டாக்டர் ம.மல்லிகா குழந்தைவேல், இராம.ஸ்ரீனிவாசன்,எம்.ஜி.எஸ்.ரமேஷ்பாபு மற்றும் கோயில் உதவி ஆணையர் இரா.இளையராஜா மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.