மோடிக்கு ஒரு ஏக்கர் நிலம் கூட சொந்தமாக இல்லை - ஜான் பாண்டியன்

எங்களுடன் இணைந்து பணியாற்றி உயர்ந்து விட்டு தற்போது திமுகவுக்கு ஆதரவாக வாக்குகளை பிரிக்கும் வேலையில் ஈடுபடும் எடப்பாடி பழனிச்சாமியிடம் யார் பிரதமர் வேட்பாளர் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். பாஜகவை பொறுத்தவரை பிரதமர் வேட்பாளராக இருக்கும் நரேந்திர மோடிக்கு இதுவரை ஒரு ஏக்கர் நிலம் கூட சொந்தமாக கிடையாது. என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் பேசினார்.

Update: 2024-04-05 06:25 GMT

ஜான்பாண்டியன் 

ராஜபாளையம் நகர் பகுதிகளில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசும்போது, பாஜகவை எதிர்த்து நிற்கும் திமுகவினர் மக்களை படுகுழியில் ஆழ்த்தியதுடன் நெசவாளர்கள் எழுந்து நடக்க முடியாத அளவில் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். விலைவாசி உயர்வு காரணமாக ஏழை எளிய மக்கள் பட்டினியாக கிடைக்கின்றனர். கொள்ளை அடிப்பதே நோக்கமாகக் கொண்டு செயல்படும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டுமா? என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கு முன் தமிழகத்திலிருந்து சென்ற 39 எம்பிக்கள் பாராளுமன்றத்தில் உறங்கி எழுந்து வந்துள்ளனர். மக்களுக்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை.

தென்காசி பாராளுமன்ற தொகுதி எம்பி யாக இருந்த தனுஷ் குமார் இதுவரை பாரத பிரதமரை நேரில் சந்தித்து பேசியது கூட கிடையாது. பரந்த மனப்பான்மை கொண்ட பாரத பிரதமர் மோடியிடம் சென்று தென்காசி தொகுதிக்கு நல்ல திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டிருந்தால் இன்று தொகுதி மேம்பட்டிருக்கும். அதை விடுத்து வாய் பேசாமல் இருந்த திமுகவுக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இதற்கு முன் வாக்களித்த கம்யூனிஸ்ட் கட்சியினர் இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியவில்லை. காங்கிரசார் அளவு இன்றி சட்டை போடுவார்களே தவிர்த்து அவர்களுக்கு தகுதி கிடையாது.

நம்மால் உயர்ந்து விட்டு தற்போது நம்மை எதிர்க்க துணிந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த தென்காசி தொகுதியை மேம்படுத்த பாரத பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச இருக்கிறேன். எனவே உங்கள் வாக்குகளை தாமரை சின்னத்திற்கு அளிக்க வேண்டும். மீண்டும் மோடி வருவார் வந்து கொண்டே இருப்பார். இது இந்திய மக்களால் உறுதி செய்யப்பட்ட ஒன்று. அவர் அருகில் அமர்ந்து தென்காசி தொகுதியை மேம்படுத்த என்னை வழியனுப்பி வைப்பீர்கள் என்றால் உங்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறேன். தென்காசி தொகுதி மக்கள் தொழிற்சாலை இன்றி தவித்து வருகின்றனர். பூக்கள் அதிகமாக விளையும் இடத்தில் வாசனை திரவிய ஆலை இதுவரை அமைக்கப்படவில்லை. தரணி சர்க்கரை ஆலையை மூடிவிட்டு ஐந்து லட்சம் ஏழை விவசாயிகளின் 25 கோடி ரூபாயை கொள்ளையடித்து விட்டு திமுகவினர் அமைதியாக இருக்கின்றனர்.

விவசாயிகளின் நிலை குறித்து திமுகவினர் கவலை கொள்வது கிடையாது. தேர்தல் நேரத்தில் அழுக்கு மூட்டைகளை அதிகமாக பேசி பொய்யே குலமாக, பொய்யே தொழிலாக, பொய்யே பிரச்சாரமாக மேற்கொண்டு மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்திற்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சியினருக்கு பிரதமர் வேட்பாளர் யார் என இதுவரை தெரியவில்லை. பிரதமர் வேட்பாளரை இல்லாத கட்சிகளுக்கு வாக்களித்து வாக்குகளை சீரழிக்க வேண்டாம். எங்களுடன் இணைந்து பணியாற்றி உயர்ந்து விட்டு தற்போது திமுகவுக்கு ஆதரவாக வாக்குகளை பிரிக்கும் வேலையில் ஈடுபடும் எடப்பாடி பழனிச்சாமி இடம் யார் பிரதமர் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். ஆனால் பாஜகவை பொறுத்தவரை பிரதமர் வேட்பாளராக இருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கு இதுவரை ஒரு ஏக்கர் நிலம் கூட சொந்தமாக கிடையாது. மக்கள் தொண்டுகாக வாழும் பிரதமர் மோடி அவர்கள் வெற்றி பெற தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். என்றார்.

Tags:    

Similar News