வார விடுமுறை வேண்டும் !
விருதுநகர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் ஒப்பந்த ஊழியர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படாமல் தொடர்ந்து பணியாற்றுவதால் மன உளைச்சலில் உள்ளனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் ஒப்பந்த ஊழியர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படாமல் தொடர்ந்து பணியாற்றுவதால் மன உளைச்சலில் உள்ளனர்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் துாய்மை, பாதுகாப்பு, வெளிநோயாளிகளுக்கு டோக்கன் சீட்டு வழங்குதல், நாற்காலிகளில் நோயாளிகளை அழைத்து செல்லுதல் உள்பட பல பணிகளை மேற்கொள்வதற்காக தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 160 பேர் நியமிக்கப்பட்டு மாதம் ஊதியமாக இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தம் போக ரூ.11 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படவில்லை.
இது குறித்து அரசு மருத்துவமனையில் நடந்த துாய்மை பணியாளர் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய துாய்மை பணியாளர் நல வாரியத்தலைவர் வெங்கடேசனிடம் ஊழியர்கள் புகார் கூறினர்.விசாரித்து வாரவிடுமுறை, மாதம் ஒரு முறை அத்தியாவசிய விடுமுறை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் இதுவரை விடுமுறை அளிப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தங்கள் சொந்த வேலைக்கு செல்வதாக இருந்தாலும் முன்கூட்டியே தெரிவித்து விடுப்பு எடுத்தாலும் சம்பளத்தில் பிடித்தம் செய்வது தொடர்கதையாகவே உள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பணியாளர்களில் பலர் வேலையை விட்டு வெளியேறுகின்றனர். ஆனால் புதிய பணியாளர்கள் எளிதாக கிடைப்பதால் வார விடுமுறை அளிக்காமல் ஒப்பந்த நிறுவனம் அலட்சியம் காட்டுகிறது.இது போன்று விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணி செய்வதால் குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்குவது குறைந்து மன அழுத்திற்கு ஆளாகி மன நோயாளிகளாக மாறி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையீட்டு தனியார் ஒப்பந்த பணியாளர்களுக்கும் வாரவிடுமுறை அளிக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.