அதிகரித்து வரும் நீர் மோர் பந்தல்கள்
குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல்கள் அதிகரித்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல்கள் அதிகரித்து வருகிறது. கோடை வெப்பம் இந்த ஆண்டு அதிகம் என்பது அனைவரது கருத்து. வெப்பத்தை சமாளிக்க பலரும் பலவழிகளில் முயன்று வருகிறார்கள். குளிர் சீதோஷ்ண நிலையில் உள்ள ஊட்டி, கொடைக்காணல் போன்ற சுற்றுலா இடங்களுக்கு சென்று வருகிறார்கள்.
வீடுகள், அலுவலகங்களில் ஏ.சி., ஏர் கூலர் வைத்து சமாளித்து வருகிறார்கள். இளநீர், தர்பூசணி, கரும்பு சாறு உள்பட குளிர்பானங்கள் அருந்தி சமாளித்து வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சியினர் கோடைக்காலத்தில் செய்வது நீர் மோர் பந்தல் அமைத்து, கோடை வெப்ப காலம் முடியும் வரை நீர் மோர் வழங்கி வருவார்கள்.
இந்த ஆண்டு தேர்தல் வந்ததால், நீர் மோர் பந்தல் குறித்து எந்த அரசியல் கட்சியினரும் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் முடிந்த பின் அ.தி.மு.க., தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டன. சேலம் சாலையில் ஜே.கே.கே. முனிராஜா கல்வி நிறுவன உரிமையாளர் வீட்டு முன் நீர் மோர் பந்தல் அமைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர் கொடுத்து வருகிறார்கள்.
பஸ் ஸ்டாண்ட் அருகே பாசம் முதியோர் இல்லம் சார்பிலும், ஆனங்கூர் பிரிவில் சுமை தூக்குவோர் சங்கம் சார்பிலும், கத்தேரி பிரிவில் பா.ம.க. சார்பிலும் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி வருகின்றனர்.